நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – கயல்விழி தம்பதியினருக்குச் சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதனையொட்டி, சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்திற்குத் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேள தாளங்கள் முழங்க, தங்கச் சங்கிலி மற்றும் பாரம்பரிய சீர்வரிசைத் தட்டுகளுடன் சென்று குழந்தையை வாழ்த்தினார்.
தமிழக அரசியல் களத்தில் இரு வேறு துருவங்களாக இருக்கும் கட்சிகளின் முக்கியப் புள்ளிகளுக்கு இடையே நடந்த இந்தச் சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது. பல்வேறு அரசியல் விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்த நிலையில், சீமான் வீட்டுக்குத் தான் சீர்வரிசை எடுத்துச் சென்றதற்கான உண்மையான காரணத்தை அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், “முன்னாள் சபாநாயகர் மறைந்த காளிமுத்துவுடன் (கயல்விழியின் தந்தை) எனக்குச் சிறுவயதிலிருந்தே நெருங்கிய பழக்கம் உண்டு. அந்த வகையில், சீமானின் மனைவி கயல்விழியிடம் சிறுவயதிலிருந்தே எனது சொந்தத் தங்கையைப் போலப் பழகி வருகிறேன். எனது தங்கைக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு காளி என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த மகிழ்ச்சியான செய்தியை உலகிற்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, ஒரு மூத்த சகோதரனாக எனது கடமையைச் செய்யச் சீர்வரிசை கொண்டு சென்றேன். இந்த நிகழ்வுக்குப் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். எங்கள் கட்சியின் தலைவரும் (முதல்வர் மு.க.ஸ்டாலின்) இதற்குத் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்” என்று கூறி, இந்த விவகாரத்தில் எழுந்த அரசியல் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
