தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக மென்பொருள் பொறியாளரான கவின் செல்வகணேஷ், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நெல்லை கேடிசி நகரில் சாதி மறுப்பு காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான சுர்ஜித் என்பவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த கொடூரக் கொலையில் சுர்ஜித்தின் பெற்றோரும், தமிழ்நாடு சிறப்பு காவல்படை சார்பு ஆய்வாளர்களுமான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கும் தொடர்பிருப்பது உறுதியானதை அடுத்து, அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். முன்னதாக தந்தை சரவணன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு, அவர்களது ஜாமீன் மனுக்கள் மதுரை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. தற்போது இக்கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக புலனாய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இவ்வழக்கின் முக்கிய திருப்பமாக குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டிருந்த சுர்ஜித்தின் தாயாரான பெண் எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரி இன்று சிபிசிஐடி போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றம் அவருக்கு எதிராக ஏற்கனவே பிடிவாரண்ட் பிறப்பித்திருந்த சூழலில், சிபிசிஐடி போலீசார் கொலை நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
தலைமறைவாக இருந்த பெண் காவல் அதிகாரி கிருஷ்ணகுமாரியின் கைதைத் தொடர்ந்து, இந்த ஆணவக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு வருவதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தென் மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
