டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கக்கூடிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் சூட்டிங் பல கட்டங்களாக விறுவிறுப்பாக நடந்து தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

இதன் சில காட்சிகள் சென்னை விமானம் நிலையத்தில் படமாக்கப்படுகிறது. தேவையான இடங்களில் சூட்டிங் நடத்த தயாரிப்பு நிறுவனம் அனுமதி பெற்று, ஜிஎஸ்டி உட்பட ரூ.1.24 கோடி கட்டணமாக விமான நிலைய நிர்வாகத்திடம் செலுத்தி இருப்பதாக தெரிகிறது. அங்கு இறுதிக்கட்ட சூட்டிங் முழுவீச்சில் நடந்தது. விமானம் புறப்படும் பகுதியில் மட்டும் படமெடுக்க அனுமதி வழங்கப்பட்டதாகவும், படக்குழுவினர் விமான நிலையத்தின் மற்ற சில பகுதியில் ஒரு காட்சியை படமாக்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதன் காரணமாக விமான நிலைய அதிகாரிகள் முறையான அனுமதி இல்லை என சொல்லி படப்பிடிப்பை நிறுத்துமாறு உத்தரவிட்டதாகவும், இதனால் நேற்று சூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் செய்தி நிறுவனம் இந்தியன் 2 படக்குழுவிடம் விமான நிலையத்தில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது குறித்து விளக்கம் கேட்டது. அதற்கு பதிலளித்த படக்குழு, முறையான அனுமதியின்றி விமான நிலையத்தில் சூட்டிங் நடத்த முடியாது என்று தெரிவித்தது. அதோடு படப்பிடிப்பு நிறுத்தப்படவில்லை எனவும் விளக்கமளித்தது.