பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் கல்லூரிக்கு வந்தடைந்தார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் மோடி. அதனைத்தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் கன்னியாகுமரியில் விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் விவேகானந்தர் கல்லூரிக்கு வந்து, அங்கு நடக்கும் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் பிரதமர் மோடி. பிரதமர் வருகையையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் வெற்றிபெற வேண்டும் என பாஜக தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார். சமீபத்தில் கூட சென்னைக்கு வந்திருந்தார் பிரதமர் மோடி. இந்த ஆண்டு மட்டும் 5வது முறையாக தமிழகத்திற்கு வந்துள்ளார் மோடி.

அதனை தொடர்ந்து பாஜகவின் ஒரு வலுவான கோட்டை என கருதப்படும் கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் பிரச்சாரம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து அவர் கோவை (18ஆம் தேதி) மற்றும் சேலம் (19ஆம் தேதி) ஆகிய இடங்களிலும் அடுத்த வாரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளார். இதனிடையே நரேந்திர மோடியை வரவேற்பதற்காக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அவருடைய ஹெலிகாப்டர் அருகில் நின்று வரவேற்றனர்.