கனமழை காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு தெலுங்கானா அரசு 2 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது.

மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் புதன் மற்றும் வியாழன் (ஜூலை 26 மற்றும் 27) ஆகிய தேதிகளில் மூட  முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் கல்வி அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டிக்கு உத்தரவிட்டுள்ளார்.

கனமழை காரணமாக சில மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. ஏரிகள், தொட்டிகள் மற்றும் பிற நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன.ஒருங்கிணைந்த நிஜாமாபாத் மாவட்டத்தின் வேல்பூர் மண்டலத்தில் வரலாறு காணாத 46 செ.மீ மழை பெய்துள்ளது. 2 ஏரிகள் உடைந்ததால் குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கின. மண்டலத்தில் உள்ள வயல்களிலும் வெள்ளம் சூழ்ந்ததால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) ஐதராபாத் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு புதன்கிழமை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில், கம்மம், நல்கொண்டா, சூர்யபேட்டை, மஹபூபாபாத், ஜங்கான், சித்திபேட், யாதாத்ரி புவனகிரி மற்றும் ஐதராபாத் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். மேலும் 9 மாவட்டங்களுக்கு IMD ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.