பெங்களூரு புறநகர் கோனகனஹள்ளி கிராமத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஒரு துயரச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நிதி நெருக்கடி மற்றும் குடும்ப மனஉளைச்சலால், தந்தை சிவகுமார் (சிவு) தனது மகள் சந்திரகலா (11) மற்றும் மகன் உதய் சூர்யா (7) ஆகிய இருவரின் கழுத்தை நெரித்து கொலை செய்து, பின்னர் தான் தற்கொலை செய்துகொண்டார். அவரது மனைவி மஞ்சுளா (30) சம்பவத்திற்கு பின்னர் தற்கொலைக்கு முயன்ற நிலையில், அக்கம்பக்கத்தினர் அவரது அலறலை கேட்டு விரைந்து வந்து காப்பாற்றியுள்ளனர். தற்போது அவர் காவல்துறையிடம் விசாரணையில் உள்ளார்.
இந்த மனவேதனையான கொலை-தற்கொலைச் சம்பவத்திற்கு, தம்பதியின் சாதி கலப்புத் திருமணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட குடும்ப புறக்கணிப்பு மற்றும் வேலை இழப்பு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் வேலை இழந்த சிவு, மது பழக்கத்திற்கு அடிமையாகி, மஞ்சுளாவின் குறைந்த வருமானத்தில் குடும்பம் இயங்க முடியாத நிலைக்கு சென்றது.
சம்பவத்தன்று சிவு மனைவியை உணவுக்காக அனுப்பி வைத்த பிறகு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வீட்டிற்கு திரும்பிய மஞ்சுளா, குழந்தைகளின் சடலத்தைக் கண்டு தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
