உத்தரப்பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு உள்ளூர் சந்தையில், செப்டம்பர் 13, சனிக்கிழமை காலை, ஒரு கடைக்குள் 8 அடி நீளமுள்ள பைத்தான் பாம்பு இருப்பது கண்டறியப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடை உரிமையாளர் காலையில் கடையை திறந்தபோது, இந்த பயங்கரமான பாம்பு உள்ளே சுருண்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் பதற்றமடைந்தது கத்தி கூச்சலிட அருகில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். இந்த நிகழ்வு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆரம்பத்தில், உள்ளூர் மக்கள் பாம்பை விரட்ட முயற்சித்தனர், ஆனால் அதன் அளவும் வலிமையும் காரணமாக அது தோல்வியில் முடிந்தது. பின்னர், தொழில்முறை பாம்பு பிடிப்பவர் ஒருவர் அழைக்கப்பட்டார். மீட்பு பணி சவாலாக இருந்தது, ஆனால் பாம்பு ஒரு பையில் பாதுகாப்பாக பிடிக்கப்பட்டது.

ஆனால், பாம்பு மீட்கப்பட்டு வெளியே கொண்டு செல்லப்படும்போது, பையிலிருந்து தப்பி அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் கீழ் பதுங்கியது. சில நிமிட பதற்றத்திற்கு பிறகு, பாம்பு பிடிப்பவர் அதை மீண்டும் பாதுகாப்பாக பிடித்து, இறுதியாக காட்டில் விடுவித்தார். அருகில் உள்ள வடிகால் வழியாக பாம்பு கடைக்குள் நுழைந்திருக்கலாம் என உள்ளூர் மக்கள் சந்தேகிக்கின்றனர்.