குழந்தைகள் நள்ளிரவில் திடீரென அலறித் துடித்து எழுவதும், காலையில் அதுபற்றி எதுவுமே தெரியாமல் இருப்பதும் பல பெற்றோர்களைப் பீதியில் ஆழ்த்தும் ஒரு விஷயமாக உள்ளது. இது போன்ற ஒரு அரிய வகை தூக்கக் கோளாறான ‘ஸ்லீப் டெரர்’ அல்லது இரவு நேர அச்சம் குறித்து ஐதராபாத்தைச் சேர்ந்த பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார் விளக்கியுள்ளார்.

மேலும் பெரும்பாலும் 3 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் காணப்படும் இந்த நிலை, ஆழ்ந்த உறக்கத்தின் போது ஏற்படுகிறது. சாதாரணக் கனவுகளைப் போலன்றி, இதில் குழந்தைகள் கண்களைத் திறந்து வைத்திருந்தாலும் சுயநினைவின்றி இருப்பார்கள், வியர்த்துக் கொட்டுதல் மற்றும் வேகமான இதயத்துடிப்பு போன்ற அறிகுறிகளுடன் மிகுந்த பயத்தில் காணப்படுவார்கள்.

“>

இத்தகைய சூழலில் பெற்றோர்கள் பதற்றமடையாமல் நிதானமாகச் செயல்படுவது அவசியம் என்று மருத்துவர் அறிவுறுத்துகிறார். குழந்தை அலறும்போது அவர்களைக் கட்டாயப்படுத்தி எழுப்ப முயற்சி செய்யக்கூடாது, ஏனெனில் அது அவர்களை மேலும் குழப்பமடையச் செய்யும். மாறாக, குழந்தை கீழே விழுந்துவிடாமல் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்வதும், மெதுவாக அவர்களை மீண்டும் உறங்க வைப்பதும் சிறந்தது.

இதனால் குழந்தை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இதுபோல அலறினால், அந்த நேரத்திற்கு 15 முதல் 30 நிமிடங்களுக்கு முன்பாகவே குழந்தையை லேசாக எழுப்பி மீண்டும் தூங்க வைக்கும் முறை நல்ல பலன் தரும். சரியான நேரத்திற்கு உறங்க வைப்பதும், போதுமான ஓய்வு அளிப்பதும் இத்தகைய பாதிப்புகளைக் குறைக்க உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.