தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, புத்தாண்டு விருந்து அளித்து கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொன்ற மனைவியை போலீஸார் கைது செய்தனர்.

ஹைதராபாத்தின் மீர்பேட் பகுதியில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் கடந்த 2-ஆம் தேதி இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், உயிரிழந்தவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நாராயண பெஹரா (32) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரது மனைவி பந்திதாவிடம் (27) போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கணவர் மாயமானது குறித்து அவர் ஏன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்ற கோணத்தில் போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது.

பந்திதா முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மீர்பேட் பகுதியில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த பந்திதாவுக்கும், அதே பகுதியில் வசிக்கும் பீகாரைச் சேர்ந்த வெல்டர் வித்யாசாகர் (25) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

தங்கள் கள்ளக்காதலுக்கு நாராயண பெஹரா இடையூறாக இருந்ததால், அவரைத் தீர்த்துக்கட்ட இருவரும் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில், வித்யாசாகர் நாராயணாவை மது அருந்த அழைத்துச் சென்றுள்ளார். நாராயணா போதையில் வீடு திரும்பியதும், பந்திதா அவரிடம் வேண்டுமென்றே தகராறு செய்துள்ளார். அப்போது மறைந்திருந்த வித்யாசாகரும் சேர்ந்து கொண்டு, இரும்பு கம்பியால் நாராயணாவின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து நாராயணா உயிரிழந்தார். பின்னர் இருவருமாகச் சேர்ந்து சடலத்தை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்‌.

பந்திதா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து பந்திதா மற்றும் அவரது கள்ளக்காதலன் வித்யாசாகர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். 8 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 6 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், கள்ளக்காதலுக்காகக் கணவரைக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.