மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் உள்ள மக்கள் அடிப்படை வசதிகளை இழந்து கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் காஷ்மீர் மக்கள் மனிதாபிமானத்துடன் நிதி உதவி வழங்கி வருகின்றனர். பெரியவர்கள் மட்டுமல்லாது, சிறு குழந்தைகளும் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை ஈரான் மக்களின் நலனுக்காக அளித்து வருகின்றனர்.
இந்த நெகிழ்ச்சியான நிகழ்வுகளுக்கு மகுடம் வைப்பதைப் போல, காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பெண்மணி 28 ஆண்டுகளுக்கு முன்பு தனது மறைந்த கணவர் தனக்கு பரிசாக அளித்த தங்க நகையை ஈரானியர்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். தனது கணவரின் நினைவாக போற்றிப் பாதுகாத்த அந்தப் பொருளை மற்றவர்களின் துயர் துடைக்க அவர் வழங்கிய விதம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம், இந்தியர்களின் இந்தத் தூய்மையான அன்பும் உணர்வுகளுமே தங்களுக்குப் பெரிய ஆறுதல் என உருக்கமாகத் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட ஈரானியர்களுக்கு உதவ விரும்பும் இந்தியர்களுக்காக கடந்த மார்ச் 14 அன்று வங்கி விவரங்களை தூதரகம் வெளியிட்ட நிலையில், பலரும் தங்களால் முடிந்த பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
