அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தீவிரத் தாக்குதலைத் தொடுத்துள்ளது. குறிப்பாக, உலகளாவிய எரிபொருள் போக்குவரத்திற்கு முக்கியமாகத் திகழும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதோடு, மேற்கு ஆசியாவின் எரிசக்தி வளங்களையும் குறிவைத்துள்ளது.
இதனால் கத்தார் போன்ற நாடுகள் உற்பத்தியை நிறுத்தியுள்ளதால், உலகெங்கும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. இந்த நெருக்கடிக்கு மத்தியில், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கப் போவதாக முதலில் எச்சரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், பின்னர் திடீரென தனது முடிவை மாற்றிக்கொண்டார். அமைதிப் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக நடப்பதாகக் கூறி, தாக்குதல் திட்டத்தை ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அவர் அறிவித்தார்.
ஆனால், அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும், தங்களின் பதிலடிக்கு அஞ்சியே அமெரிக்கா பின்வாங்குவதாகவும் ஈரான் தரப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், டிரம்ப் அறிவித்த ஐந்து நாள் போர்நிறுத்தத்தை மீறி, ஈரானின் இஸ்பஹான் மற்றும் கோர்ரம்ஷஹர் பகுதிகளில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை அழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் மேலும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
