டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியைச் சேர்ந்த ரச்சனா யாதவ் (44), அந்தப் பகுதியின் நலச் சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு இவரது கணவர் விஜயேந்திர யாதவ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அந்த வழக்கின் முக்கிய சாட்சியாக ரச்சனா இருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை வீட்டின் அருகே உள்ள கடைக்குச் சென்ற ரச்சனாவை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பினர். பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

கணவர் கொலை வழக்கில் ரச்சனா சாட்சி சொல்வதைத் தடுப்பதற்காகவே, அந்த வழக்கில் தொடர்புடையவர்களே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, குற்றவாளிகள் தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது உறுதியானது.

இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.