பிரிந்து வாழும் கணவரின் அனுமதியின்றி, 14 வாரக் கருவைக் கலைத்த பெண்ணிற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கருக்கலைப்பு செய்த மனைவி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி கணவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “ஒரு பெண் தனது கர்ப்பத்தைத் தொடர விரும்பாதபோது, அவரைக் கட்டாயப்படுத்துவது அவரது உடல் மற்றும் தனிப்பட்ட உரிமையைப் பறிக்கும் செயல்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.

மேலும், குழந்தையைத் தனியாக வளர்க்கும் முழுப் பொறுப்பும் பெண்ணின் மீதே விழுவதால், கருக்கலைப்பு குறித்து முடிவெடுக்கும் முழு உரிமை அந்தப் பெண்ணிற்கே உண்டு என்று நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா தீர்ப்பளித்தார்.

சட்டப்பூர்வமாகச் செய்யப்படும் கருக்கலைப்பு ஒருபோதும் குற்றமாகாது என்றும், கட்டாயக் கர்ப்பம் பெண்ணைப் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் என்றும் கூறி, அந்தப் பெண் மீதான அனைத்து நடவடிக்கைகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.