அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்தில் சிக்கி உள்ளது. மிட்லேண்டில் இருந்து வந்து கொண்டிருந்த அந்த விமானம் அவசரமாக மெக்னியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு அனுமதி கோரியது. அனுமதி கொடுக்கப்பட்டதும் ரன் வேயில் விமானத்தை விமானி தரையிறக்க முயற்சித்தார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் வேகமாக சென்று ரன்வே வேலியை உடைத்துக்கொண்டு எதிரே சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் காரின் முன் பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது. இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காரில் வந்த நபர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று விமானத்தில் பயணித்த இருவரையும் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்துள்ளனர். இந்த விபத்தை காணொளியாக பதிவு செய்தவர் சமூக வலைதளத்தில் வெளியிட தற்போது அந்த காணொளி வைரல் ஆகி வருகிறது.