காஞ்சிபுரம் மாவட்டம் குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவர் சொந்தமாக டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது மகன் கிஷோர்(17). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு கிஷோர் மற்றும் அவரது நண்பர் ஏனோஷ் இருவரும் சேர்ந்து அண்ணாநகரில் உள்ள நண்பர்களை பார்க்க சென்றுள்ளனர்.

இந்த நிலையில் இரவு 10 மணி அளவில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் இருவரும் சென்று கொண்டிருந்த போது அருகேயுள்ள வளைவில் திரும்பினர். அப்போது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தூணில் பயங்கரமாக மோதியது. இதனால் கிஷோர், ஏனோஷ் இருவருமே தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் கிஷோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஏனோஷ்- க்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் உள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த ஏரோஷை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கிஷோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐ.பி.எல் பார்த்துவிட்டு சென்ற 2 வாலிபர்களுக்கு இதே இடத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.