பெங்களூரு அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிபட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்..

2023 ஐபிஎல் தொடரின்  24 ஆவது லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாப் டு பிளெசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணியும் நேற்று மோதியது. இப்போட்டி சிறிய மைதானமான பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டர்கள் சிக்ஸ், பவுண்டரி என அதிரடியாக விளையாடினர். துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 3 ரன்னில் அவுட் ஆனபோதிலும் மற்றொரு துவக்க வீரர் டெவான் கான்வே மற்றும் ரஹானே அதிரடியாக ஆடினர்.. அதன்பின் சிறப்பாக ஆடிய ரஹானே 37 ரன்களில் அவுட் ஆனார்.. தொடர்ந்து சிவம் துபே களமிறங்கி கான்வேயுடன் கைகோர்த்தார்.. இந்த ஜோடி அதிரடி காட்டியது..

பின் கான்வே 45 பந்துகளில் (6 பவுண்டரி,6 சிக்ஸ்) 83 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.. அதேபோல சிவம் துபேவும்  27 பந்துகளில் (5 சிக்ஸ், 2 பவுண்டரி) 52 ரன்கள் அடித்து கடைசி கட்டத்தில் அவுட் ஆனார். அதன்பின் அம்பத்தி ராயுடு 14 ரன்ககளும், ஜடேஜா 10 ரன்களும் எடுத்து  அவுட் ஆகினர். மொயின் அலி அவர் பங்குக்கு கடைசியாக 19 ரன்களுடனும், தல தோனி 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். சென்னை அணி 20 ஓவரில் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது..

பின்னர் இமாலய இலக்கை துரத்துவதற்காக பெங்களூர் அணியின் கேப்டன் பாப் டு பிளெசிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் களமிறங்கினர். இதில் ஆகாஷ் சிங்கின் முதல் ஓவரில் 4வது பந்தில் விராட் கோலி பேட்டில் பட்டு அவரது காலில் பட்டு வந்து ஸ்டம்பை தாக்கியது. இதனால் கோலி 6 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

இதையடுத்து வந்த லொம்ரோர் அதே ஓவரில் கேட்ச் கொடுத்தார். அதை தீக்ஷனா கோட்டை விட்டார். பின் லோம்ரோர் துஷார் தேஷ்பாண்டேவின் இரண்டாவது ஓவரில் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். ஆர்சிபி 2 ஓவரில் 15 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்திருந்தது.

இதையடுத்து டு பிளெசிஸ்-மேக்ஸ்வெல் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.. இவர்கள் இருவரும் ஓவருக்கு பவுண்டரி சிக்ஸர்கள் என அடித்து மிரட்டினர். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்தியது இருவரும் அரை சதம் கடந்து விளாசினர். இதனால் ஆர்சிபி யின் கை ஓங்கி இருந்தது.. எப்படியாவது ஒரு விக்கெட்டை எடுத்தால் மட்டுமே ஆட்டம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வரும் என்ற இக்கட்டான நிலையில் சிஎஸ்கே இருந்தது.

அப்போது போட்டியின் 13ஆவது ஓவரை தீக்ஷனா வீசினார். அந்த ஓவரில் மேக்ஸ்வெல் சிக்ஸர் அடிக்க முயன்று கேட்ச் கொடுக்க, அதனை தோனி அந்த பதட்டமான தருணத்திலும் கூலாக பிடித்தார்.. ஒருவழியாக பயம் காட்டிய மேக்ஸ்வெல்  36 பந்துகளில் 3 பவுண்டரி, 8 சிக்ஸர் உட்பட 76 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதைத்தொடர்ந்து அதிரடியாக அடிவந்த கேப்டன் டு பிளெசிஸ் மொயின் அலியின் 14வது ஓவரின் கடைசி பந்தை தூக்கி அடிக்க முயன்று, அதேபோல தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பிளெசிஸ் 33 பந்துகளில் 5 பவுண்டரி 4 சிக்ஸர் உட்பட 62 ரன்கள் எடுத்தார்.

பெங்களூர் அணி 14 ஓவரில் 159 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து இருந்தது. அதன்பின் வந்த சபாஷ் அகமது 12 ரன்கள் அதேபோல தினேஷ் கார்த்திக் சற்று அதிரடியாக ஆடி விட்டு அவரும் 28 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் வெற்றி சிஎஸ்கே பக்கம் வரத் தொடங்கியது. கடைசி 2 ஓவரில் ஆர்சிபியின் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. துஷார் தேஷ்பாண்டே வீசிய 19 ஆவது ஓவரில் ஆர்சிபி அணி  12 ரன்கள் எடுத்தது. அந்த ஓவரில் வெயின் பார்னெல் 2 ரன்னில் அவுட் ஆனார்..

பின்னர் கடைசி ஓவரில் ஆர்சிபி வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட இளம் மலிங்கா என்று அழைக்கப்படும் பத்திரனா அந்த ஓவரை வீசினார். அவர் அந்த ஓவரை சூப்பராக வீசி 10 ரன்கள் மட்டுமே கொடுத்து கடைசி பந்தில் பிரபு தேசாய் விக்கெட்டை வீழ்த்தினார். ஹசரங்கா 2 ரன்னுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்தது.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி யை வீழ்த்தியது.. அப்போது தான் சிஎஸ்கே ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர்.. ஒரு கட்டத்தில் ஆர்சிபி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.. முக்கியமான நேரத்தில் மேக்ஸ்வெல் மற்றும் கேப்டன் டு பிளெசிஸ் அவுட் ஆனதால் ஆட்டம் சென்னை பக்கம் திரும்பியது. இதில் மேக்ஸ்வெல் மற்றும்  டு பிளெசிஸ் ஆகிய இருவரின் கேட்சை தோனி பதட்டமான நேரத்தில் பிடித்தது குறிப்பிடத்தக்கது.. சென்னை அணியில் தேஷ்பாண்டே அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், பத்திரனா 2 விக்கெட்டுகளும், ஆகாஷ் சிங் மற்றும் மொயின் அலி தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்..

இப்போோட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 6 புள்ளிகளுடன் சென்னை அணி புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு சென்றுள்ளது. சென்னை அணி 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதே நேரம் ஆர்சிபி அணி 5 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 7வது இடத்தில் உள்ளது..