
தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியறையில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று சிவகுமார் செங்கோட்டையிலிருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்தை இயக்கி சென்றுள்ளார். அந்த பேருந்தில் 44 பயணிகள் இருந்தனர். நேற்று இரவு 9 மணிக்கு அந்த பேருந்து மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வந்தது. சிறிது ஓய்வெடுத்து விட்டு இரவு 11 மணிக்கு சிவக்குமார் பேருந்தை வாடிப்பட்டி அருகே ஓட்டி சென்றார்.
அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சுதாரித்துக் கொண்டு சாலையோரம் பேருந்தை நிறுத்தி விட்டார். உடனே அந்த பேருந்தின் கண்டக்டர் பாலசுப்பிரமணி அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிளை மறித்து சிவக்குமாரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிவக்குமார் ஏற்கனவே உயிரிழந்த விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.