தமிழகத்தில் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டு வரும் கும்பலை முறியடிக்க போலீசார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய அளவில் தொடர்புடைய இந்த கடத்தல் கும்பலில் 60-க்கும் மேற்பட்ட நபர்கள் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த கும்பல் ஒரு நெட்வொர்க்காக செயல்பட்டு வருவதாகவும், வெளிமாநிலங்களான ஆமதாபாத், மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களை மையமாகக் கொண்டு கடத்தல் நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். குறிப்பாக அரசு மருத்துவமனைகள், ரெயில்வே நிலைய பிளாட்பாரங்கள் போன்ற இடங்களில் இருந்து குழந்தைகள் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு கடத்தப்பட்ட குழந்தைகள் ரெயில்கள் மூலம் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டு, பெண் குழந்தைகள் ரூ.4 லட்சம் வரை, ஆண் குழந்தைகள் ரூ.5 லட்சம் வரை விலை பேசி விற்பனை செய்யப்படுவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. வாங்குபவர்கள் முன்கூட்டியே தேர்வு செய்யப்பட்டு, ரகசியமாக குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டு பணம் பெற்றுக்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், தனிப்படை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் சேலம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (35), அவரது இரண்டாவது மனைவி நித்யா (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நரிகுறவ சமூகத்தைச் சேர்ந்த தம்பதியரின் குழந்தையை கடத்தி விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.

இதுபோல சேலத்தைச் சேர்ந்த ஜானகி (40), அவரது தங்கை செல்வி (36) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 15 நாட்கள் ஆன பெண் குழந்தை மற்றும் 8 மாதம் ஆன பெண் குழந்தை மீட்கப்பட்டன. இந்த வழக்கில் பிரவீன் (35) என்ற ஆம்புலன்ஸ் டிரைவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கடத்தல் கும்பலின் தலைமை பொறுப்பில் சென்னையைச் சேர்ந்த சபானா, அவரது சகோதரி ரேஷ்மா மற்றும் கொடைக்கானலைச் சேர்ந்த உமா மகேஷ்வரி ஆகியோர் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இவர்களை போலீசார் “கடத்தல் ராணிகள்” என குறிப்பிடுகின்றனர். தற்போது தலைமறைவாக உள்ள இவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குழந்தைகளை கடத்தி வருபவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை கமிஷன் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக கவனிக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.