முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை நடைப்பயிற்சியின்போது அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக அவரை அருகிலிருந்த துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரை அணிவகுக்கும் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, முதல்வருக்கு அங்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் ஸ்டாலினுக்கு சிறிய உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும், அவர் தற்போது நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவர்கள், இரு நாட்கள் ஓய்வெடுக்க ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தனது சமூக வலைதள பக்கத்தில் கூயிருப்பதாவது, மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சசர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். உடல்நலத்தைப் பற்றி பொருட்படுத்தாமல், ஓய்வில்லாமல் உழைக்கும் அவர் தனது உடல்நலத்தின் மீது அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டுமென விரும்புகிறேன். மருத்துவமனையில் இருக்கும் அவர் பூரண நலம் பெற விழைகிறேன் என பதிவிட்டுள்ளார்.