அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திடீரென திமுகவில் இணைந்த சம்பவம், அவரது ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் எடுத்த இந்த அதிரடி முடிவால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகள், இப்போது மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கே அணி அணியாகத் திரும்பத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், வடசென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் கே. ரமேஷ், ஓபிஎஸ் முகாமை விட்டு வெளியேறி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று மீண்டும் கட்சியில் இணைந்தார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அரசியல் களம் அனல் பறந்து வரும் வேளையில், வடசென்னையில் செல்வாக்குமிக்க ரமேஷ் மீண்டும் தாய் கழகத்திற்கு வந்தது அதிமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை அன்புடன் வரவேற்ற எடப்பாடியார், “தேர்தல் நேரம் நெருங்கிவிட்டது, சென்னையில் வெற்றிக்காகத் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும்” என அவருக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். ஓபிஎஸ்-ன் திமுக இணைப்புக்குப் பிறகு அவரது கூடாரம் காலியாகி வரும் நிலையில், எடப்பாடியாரின் கை ஓங்கி வருவது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
