சென்னையில் உள்ள சென்ட்ரல் பூங்கா இரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் திடீர் போராட்டம் நடைபெற்றது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்ட போராட்டக்காரர்கள், அங்குள்ள பெயர் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துகளைக் கருப்பு மையால் அழித்தனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையின் போது, மே 17 இயக்கத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் திடீரென தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த இரயில் முன் பாய்ந்தார். இதில் அவருக்குத் தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மீட்கப்பட்ட அவர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவக்குமாரின் மறைவு அவரது இயக்கத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
உயிரிழப்பதற்கு முன் சிவக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ் வாழ்க, இந்தி ஒழிக, உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்று பதிவிட்டிருந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
