2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், ‘மாவீரன் கட்டபொம்மன் பேரவை’ தற்போது அதிமுகவுடன் கைகோர்த்துள்ளது. அந்த அமைப்பின் தலைவரான பி.வி. ராதாகிருஷ்ணன், சென்னை பசுமைவழிச் சாலையிலுள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேரில் சென்று தனது ஆதரவை உறுதிப்படுத்தினார். வரும் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்குத் தங்கள் பேரவை முழு மூச்சாகப் பாடுபடும் என அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு கொண்ட மாவீரன் கட்டபொம்மன் பேரவையின் இந்த வருகை, அதிமுகவின் வாக்கு வங்கியைப் பலப்படுத்தும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் சிறிய கட்சிகள் அதிமுக பக்கம் சாய்ந்து வரும் நிலையில், இந்த இணைப்பு எடப்பாடியார் தரப்பிற்குப் கூடுதல் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. தங்களுக்கு ஆதரவு தெரிவித்த பி.வி. ராதாகிருஷ்ணனுக்கு இபிஎஸ் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதிமுகவின் இந்தக் கூட்டணி விரிவாக்கம் மற்ற கட்சிகளிடையே உற்று நோக்கப்படுகிறது.
