மலையாளத் திரையுலகின் ‘பிரேமம்’ நாயகன் நிவின் பாலி மற்றும் ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜு கூட்டணியில், இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், உலகளவில் பாக்ஸ் ஆபீஸில் பிரம்மாண்ட வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த ஓணம் பண்டிகைக் காலத்தில் திரைக்கு வந்த இத்திரைப்படம், ரசிகர்களின் குடும்பக் கொண்டாட்டமாக மாறி திரையரங்குகளை ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக மாற்றியுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த பழைய ‘விண்டேஜ்’ நிவின் பாலியை மீண்டும் திரையில் ஜாலியாகக் கொண்டுவந்ததே இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு முதன்மை காரணமாக அமைந்துள்ளது. இயற்கையான நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் சுவாரஸ்யமான காதல் என அனைத்து அம்சங்களும் கச்சிதமாகக் கலந்த இக்கதைக்களம், அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

நேர்மறையான விமர்சனங்களின் பலத்தோடு திரையரங்குகளில் வீறுநடை போடும் இத்திரைப்படம், வெளியான மிகக் குறுகிய நாட்களிலேயே உலகளவில் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, கேரளாவைத் தாண்டி தமிழகத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், தமிழ்நாட்டிலேயே ரூ. 3 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனைப் பயணத்தைத் தொடர்கிறது.

இதை தொடர்ந்து விடுமுறை நாட்கள் நீடிப்பதாலும், குடும்பங்கள் திரையரங்குகளுக்குப் படை எடுத்து வருவதாலும், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் வசூல் வரும் நாட்களில் இன்னும் பல புதிய மைல்கற்களை எட்டும் என சினிமா வர்த்தகப் பகுப்பாய்வாளர்கள் கணித்துள்ளனர்.

மேலும், விரைவில் இப்படத்தின் தமிழ் டப்பிங் பதிப்பும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘சர்வம் மாயா’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு மெகா ஹிட் வெற்றியைக் கொடுத்து நிவின் பாலி தனது வலுவான கம்பேக்கை நிரூபித்துள்ளது அவரது ரசிகர்களைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.