சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குளத்துவேல்பட்டி கிராம மக்கள், தங்கள் பகுதியில் நிலவும் கடும் ஈக்கள் தொல்லை மற்றும் சுகாதார சீர்கேட்டைக் கண்டித்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தனியார் கோழிப்பண்ணையில் இருந்து வெளியேறும் துர்நாற்றமும், கட்டுக்கடங்காத அளவில் பெருகியுள்ள ஈக்களும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளன. உணவுகளில் ஈக்கள் மொய்ப்பதால் நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளதோடு, அப்பகுதியில் வசிக்கவே முடியாத சூழல் நிலவுவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் தங்கள் கிராமத்தின் சுகாதாரத்தைப் பாதிக்கும் இந்த தனியார் கோழிப்பண்ணையை அகற்றக்கோரி, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கிராமத்தின் நுழைவாயிலில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை வைத்துள்ளனர். அடிப்படை சுகாதார வசதியைக் கூட உறுதி செய்யாத அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.