மும்பையைத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனமான Falcon Labs, Naukri.com இணையதளத்தில் Backend Developer Internship என ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. ஆரம்பத்தில் இச்செய்தி சாதாரணமாகத் தோன்றினாலும், அதில் குறிப்பிடப்பட்டிருந்த மாத சம்பளம் ₹10 என்பது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

இதற்கு சமூக வலைதளங்களில் மக்கள் பல வினோதமான மற்றும் கேலி நிறைந்த கருத்துகளை பதிவு செய்தனர். “மோமோவுக்கு கூட போதாது”, “பிச்சைக்காரர்களும் அதிகம் சம்பாதிக்கிறார்கள்” என பலர் பதிவிட்டனர். ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இச்சம்பளம் குறைந்திருக்கும்போதும், 1,901 பேர் அந்த ஒரு இடத்திற்காக விண்ணப்பித்திருந்தனர். இது இன்றைய வேலை சந்தையின் அவல நிலையை காட்டுகிறது.

இந்நிலையில், Falcon Labs நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. LinkedIn-இல் வெளியிட்ட அறிவிப்பில், “இது எங்கள் அதிகாரப்பூர்வ Naukri கணக்கில் இருந்து பதிவாகவில்லை. இது Naukri-வின் தானாக தகவல்களை சேகரிக்கும் ‘bot’ மூலம் தவறாக உருவான பதிவு. உண்மையான இண்டர்ன்ஷிப் சம்பளம் ₹10,000 ஆகும். தவறான தகவல் நீக்கப்படும்” என்று தெரிவித்தனர். இந்த சம்பவம், இன்றைய இளைஞர்களின் வேலை தேடல் பயணம் எவ்வளவு சவாலானது என்பதை வெளிப்படுத்துகிறது.