சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுக் கிடந்த நூற்றுக்கணக்கான இறந்த கோழிகளை, பொதுமக்கள் போட்டிப்போட்டுக்கொண்டு பைகளில் அள்ளிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றிலிருந்து அதிக அளவிலான இறந்த கோழிகள் கீழே கொட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் காட்டுத்தீ போலப் பரவியதையடுத்து, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் அங்கு குவியத் தொடங்கினர். எதற்காக அவை கொட்டப்பட்டன என்ற விவரம் தெரியாத நிலையிலும், இலவசமாகக் கிடைக்கிறது என்ற நோக்கில் மக்கள் அவற்றை அள்ளிச் சென்றனர்.

 

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், மக்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு கோழிகளைச் சேகரிப்பதைக் காண முடிகிறது. சிலர் சாக்கு மூட்டைகளுடன் வந்திருந்தனர், இன்னும் சிலரோ கைகளாலேயே அள்ளிச் சென்றனர். இலவச பிரியாணி விருந்துக்குக் காத்திருப்பது போன்ற இந்தத் தள்ளுமுள்ளு காட்சி, காண்போரை ஒருபுறம் வியக்க வைத்தாலும், மறுபுறம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் வெறும் வேடிக்கை மட்டுமல்ல, தீவிரமான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இறந்த விலங்குகள் அல்லது பறவைகளைத் தொடுவதன் மூலமும், அவற்றை உண்பதன் மூலமும் பல்வேறு பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்கள் பரவ வாய்ப்புள்ளது. நோயினால் இறந்த கோழிகளாக இருந்தால் அது மிகப் பெரிய சுகாதாரச் சீர்கேட்டிற்கு வழிவகுக்கும். இதனை உணராமல் மக்கள் ஆர்வத்துடன் அள்ளிச் சென்றது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வளவு பெரிய அளவில் இறந்த கோழிகள் பொது இடத்தில் கொட்டப்பட்டபோது, உள்ளூர் நிர்வாகம் ஏன் அதைத் தடுக்கவில்லை என்ற கேள்வியையும் இணையவாசிகள் எழுப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். “இலவசமாகக் கிடைத்தால் எதையும் எடுத்துச் செல்வதா? உயிருக்கு பயமில்லையா?” எனப் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.