மனிதாபிமானம் என்பது மனிதர்களுக்கு மட்டுமே உரிய தனிச்சிறப்பு என்பதை நிரூபிக்கும் வகையில், தண்டவாளத்தில் சிக்கிக்கொண்ட நாய்க்குட்டி ஒன்றை ரயில்வே ஊழியர்கள் தங்களது உயிரைப் பணையம் வைத்து மீட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது விலங்குகளுக்குப் பகுத்தறிவு குறைவு என்பதால், அவை ஆபத்தான இடங்களைக் கண்டறியத் தவறிவிடுகின்றன. அவ்வகையில், ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நாய் ஒன்றின் கால், தண்டவாளத்தின் ‘இன்டர்லாக்கிங்’ (Interlocking) எனப்படும் இரும்பு இடுக்குகளுக்கு இடையே எதிர்பாராதவிதமாகச் சிக்கிக்கொண்டது. அதிலிருந்து விடுபட முடியாமல் அந்த நாய் வலியால் துடித்தபடி சத்தமிட்டுள்ளது.

அச்சமயம் அந்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று எதிரே வந்து கொண்டிருந்தது. இதைக் கவனித்த அங்கிருந்த 4 முதல் 6 ரயில்வே ஊழியர்கள், ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் நாயை மீட்க விரைந்து வந்தனர். ஒரு ஊழியர் தண்டவாளத்தின் இணைப்பைத் தளர்த்தும் கருவியைப் பயன்படுத்தி இடுக்கைச் சற்று விலக்க, மற்றொரு ஊழியர் லாவகமாக நாயின் காலை வெளியே எடுத்தார். கால் விடுவிக்கப்பட்ட அடுத்த விநாடியே, அந்த நாய் மின்னல் வேகத்தில் ஓடி உயிர் பிழைத்தது.

சரியான நேரத்தில் ஊழியர்கள் செயல்பட்டிருக்காவிட்டால், ரயிலில் சிக்கி அந்த நாய் உயிரிழந்திருக்கும். ரயில் மிக அருகில் வந்து கொண்டிருந்த நிலையிலும், ஒரு வாயில்லா ஜீவனுக்காகத் தங்கள் உயிரைப் பணையம் வைத்து ஊழியர்கள் காட்டிய இந்த ‘மனிதநேயம்’ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் மனிதர்களை விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்துவது மனிதாபிமானம் மட்டுமே என இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் ரயில்வே ஊழியர்களுக்குத் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.