மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்ட அரசு மருத்துவமனையில், பிரசவ அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் அறுவை சிகிச்சை துணியை (Surgical Napkin) வைத்துத் தையல் போட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கர்கோன் மாவட்டம் செல்டா கிராமத்தைச் சேர்ந்த மனிஷா என்ற பெண்ணுக்கு, கடந்த மார்ச் 16-ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, கர்கோன் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மார்ச் 17-ஆம் தேதி மருத்துவர் மோஹித் குப்தா தலைமையிலான குழுவினர் அவருக்குச் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்தனர். மனிஷாவுக்குப் பெண் குழந்தை பிறந்தது.

அறுவை சிகிச்சை முடிந்து மார்ச் 21-ஆம் தேதி அவர் வீடு திரும்பினார். எனினும், வீட்டிற்குச் சென்றது முதல் அவருக்குத் தொடர்ந்து கடுமையான வயிற்று வலி இருந்து வந்துள்ளது. வலியால் துடித்த மனிஷாவை அவரது குடும்பத்தினர் இந்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றுக்குள் ஏதோ ஒரு மர்மப் பொருள் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, மார்ச் 31-ஆம் தேதி அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, அவரது வயிற்றுக்குள் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் ‘சர்ஜிக்கல் நேப்கின்’ துணி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. மாவட்ட மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பெண் வேறு எங்கும் சிகிச்சை பெறாததால், அரசு மருத்துவமனை மருத்துவர்களின் கவனக்குறைவே இதற்குச் சான்று என உறுதியானது.

இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் பவ்யா மிட்டல் உத்தரவின் பேரில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. விசாரணையில், மகப்பேறு மருத்துவர் மோஹித் குப்தா மற்றும் செவிலியர் திவ்யா வர்மா ஆகியோர் அறுவை சிகிச்சையின் போது உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் கவனக்குறைவாகச் செயல்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் மருத்துவர் மோஹித் குப்தா மற்றும் செவிலியர் திவ்யா வர்மா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சுகாதாரத்துறை ஆணையர் உத்தரவிட்டார்.

மேலும் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் துணிகளின் எண்ணிக்கையை அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் சரிபார்ப்பது கட்டாயமான நடைமுறை ஆகும். இந்த அடிப்படை விதியை மீறி, பெண்ணின் உயிருடன் விளையாடிய மருத்துவப் பணியாளர்களின் செயல் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.