மத்திய அரசு மற்றும் எஸ்.பி.ஐ. வங்கி இணைந்து ரூ.30 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் நடைமுறையில் இருப்பதாக சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பரவி வரும் தகவல் முற்றிலும் போலியானது என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகமான Fact Check Unit தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக, இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் புகைப்படத்தை பயன்படுத்தி, நம்பிக்கை அளிக்கும் வகையில் செய்தி வடிவமைக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு முடிவடைய உள்ளதால், இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனடியாக பயன்பெற, கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவு செய்ய வேண்டும் என அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பலரும் அந்த லிங்கை திறக்க முயற்சித்து ஏமாந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இத்தகவல் முழுக்க முழுக்க இணைய மோசடி எனவும், அந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலம் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி விவரங்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது. மத்திய அரசு அல்லது எஸ்.பி.ஐ. வங்கி சார்பில் தற்போது இவ்வாறான எந்த நிதி உதவித் திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், சமூக வலைதளங்கள் மற்றும் செல்போன் மூலம் வரும் லிங்குகளை சரிபார்க்காமல் கிளிக் செய்யவோ, பகிரவோ கூடாது என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு நலத்திட்டங்கள் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ அரசு இணையதளங்கள் மற்றும் அறிவிப்புகள் மூலம் மட்டுமே பெற வேண்டும் என்றும், போலி செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.
