பீகாரில் கடந்த டிசம்பர் 15 நடைபெற்ற நிகழ்ச்சியில், 1,000-க்கும் மேற்பட்ட ஆயுஷ் மருத்துவர்களுக்கு அரசு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், புதிதாக பணியில் சேர்ந்த மருத்துவர்களுக்கு நேரில் நியமன ஆணைகளை வழங்கினார்.
அப்போது, முஸ்லீம் பெண் மருத்துவர் ஒருவருக்கு நியமன ஆணை வழங்கும் தருணத்தில், அவர் அணிந்திருந்த ஹிஜாபை நிதிஷ்குமார் பிடித்து இழுத்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் இந்த செயலை அங்கு இருந்த சிலர் தடுக்க முயன்றதாகவும், ஆனால் நிதிஷ்குமார் சிரித்துக் கொண்டே அந்த செயலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் மரியாதைக்கு எதிரான செயல் எனக் குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
இதனிடையே, சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர், இச்செயலால் மன உளைச்சலுக்கு உள்ளாகியதாகவும், அரசு பணியை ஏற்க விரும்பவில்லை என்றும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,
“அந்த பெண் அரசு வேலையை மறுக்கலாம் அல்லது நரகத்திற்கே செல்லலாம்; அது அவளது தனிப்பட்ட விருப்பம். ஆனால் நிதிஷ்குமார் எந்தத் தவறும் செய்யவில்லை. பாஸ்போர்ட் பெறும் போது முகத்தை காட்ட வேண்டாமா? விமான நிலையத்தில் அடையாள சோதனையில் முகத்தை காட்ட வேண்டாமா? இது இந்தியா; இங்கு சட்டத்தின் ஆட்சி நிலவுகிறது,” என கூறினார்.
கிரிராஜ் சிங்கின் இந்த கருத்துக்கும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பெண்கள் மரியாதையை அவமதிக்கும் வகையிலும், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் இந்த கருத்து இருப்பதாக சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.
முன்னதாக, உத்தரபிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத், “நிதிஷ்குமார் அந்த பெண்ணை வேறு இடத்தில் தொட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?” என பேசியிருந்ததும் சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த விவகாரம் பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல்வர் நிதிஷ்குமார் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை.
