உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், ஹாத்ரஸ் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளைஞருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில் சுமூகமாக இருந்த இவர்களது வாழ்க்கையில், திடீரென அந்தப் பெண் தனது கணவருடன் வாழ விருப்பமில்லை எனத் தெரிவித்துப் பிரிந்து சென்றுள்ளார். கணவரின் உருவத் தோற்றம் தனக்குப் பிடிக்கவில்லை என்றும், தாம்பத்திய உறவில் தனக்குத் திருப்தி இல்லை என்றும் அந்தப் பெண் கூறிய புகார்கள், இரு குடும்பத்தினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மறுபுறம் கணவர் ராஜேஷ், இந்தத் திருமணம் இருவரது முழு சம்மதத்துடன்தான் நடைபெற்றது என்றும், திருமணத்திற்கு முன்பு பெண்ணிடம் விருப்பம் கேட்டபோது அவர் சம்மதம் சொன்னதாகவும் வேதனையுடன் தெரிவிக்கிறார். வரதட்சணை எதுவும் வாங்காமல் இரண்டரை லட்சம் ரூபாய் செலவு செய்து முறைப்படி திருமணம் செய்தும், இப்போது மனைவி தன்னை விட்டுப் பிரிந்து சென்றதால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். எந்த ஏமாற்று வேலையும் நடக்கவில்லை என்று அந்தப் பெண்ணே ஒப்புக்கொண்ட போதிலும், “எனக்குப் பிடிக்கவில்லை” என்ற ஒற்றைக் காரணத்துக்காகப் பிரிய முடிவெடுத்தது அந்தப் பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
