ரயில்வே துறையில் நீண்டகாலமாக இருந்து வரும் ஆர்.ஏ.சி முறை தொடர்பாக, நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழு முக்கியமான பரிந்துரை ஒன்றை வழங்கியுள்ளது. தற்போதுள்ள நடைமுறைப்படி, ஆர்.ஏ.சி அந்தஸ்தில் பயணிக்கும் பயணிகள் ஒரு படுக்கையை மற்றொரு பயணியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழல் இருந்தாலும், அவர்களிடமிருந்து முழுமையான பயணக் கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
இது பயணிகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்று சுட்டிக்காட்டியுள்ள குழு, முழுமையான படுக்கை வசதி இல்லாத பயணிகளுக்கு பாதி கட்டணத்தை திரும்ப வழங்கும் வகையில் புதிய நடைமுறையை உருவாக்க வேண்டும் என ரயில்வே அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்துள்ளது.
மேலும், இந்த பரிந்துரையில் ‘சூப்பர்ஃபாஸ்ட்’ ரயில்களின் தரம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வேக அளவுகோல்களைக் கொண்டு இன்னும் பல ரயில்கள் சூப்பர்ஃபாஸ்ட் பிரிவில் இயக்கப்படுவதையும், இதற்காகப் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதையும் குழு விமர்சித்துள்ளது.
இந்நிலையில் சர்வதேச தரத்திற்கு இணையாக ரயில்களின் வேகத்தை உயர்த்துவதோடு, ஆர்.ஏ.சி பயணிகளுக்கான கட்டணச் சலுகை குறித்த நடவடிக்கைகளை விரைந்து எடுத்து நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ரயில்வே வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
