கடந்த சில நாட்களாகக் குறைந்து வந்த தங்கத்தின் விலை, இன்று (பிப். 3) திடீரென மீண்டும் ஏறுமுகத்தில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. காலையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ₹14,030-க்கு விற்பனையான நிலையில், பிற்பகலில் மேலும் உயர்ந்து நகைப்பிரியர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ₹240 உயர்ந்து ₹14,270-க்கும், ஒரு சவரன் தங்கம் ₹1,920 அதிகரித்து ₹1,14,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மத்திய பட்ஜெட்டுக்குப் பிந்தைய ஏற்ற இறக்கங்களால் தங்கம் விலை இவ்வாறு தாறுமாறாக உயர்ந்து வருவதாகச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கத்தின் விலையைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று அதிரடியான உயர்வைக் கண்டுள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ₹280-க்கு விற்பனையான நிலையில், இன்று திடீரென ₹20 அதிகரித்து ₹300-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹3,00,000-ஐ எட்டியுள்ளது. திருமண சீசன் தொடங்கி உள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் அதிரடி உயர்வு, நகை வாங்கத் திட்டமிட்டிருந்த நடுத்தர மக்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.
