தமிழ் சினிமாவில் கொடிக்கட்டிப் பறந்து, தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள சி. ஜோசப் விஜய்க்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மத்தியில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, முன்பு அவரை விமர்சித்தவர்கள் இப்போது பாராட்டி வருவது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
‘கோட்’ (GOAT) படத்தைத் தொடர்ந்து, அவரது கடைசிப் படமாகத் திரைக்கு வரவிருக்கும் ‘ஜனநாயகன்’ ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும், இனி கேமரா முன் நிற்கப்போவதில்லை என்றும், மக்கள் பணியே தனது முழுநேரப் பணி என்றும் முதல்வர் விஜய் உறுதிபடத் தெரிவித்துவிட்டார்.
விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது, “நடிகர்களுக்கு ஏன் இந்த அரசியல் ஆர்வம்?” என விமர்சனம் செய்த பல பிரபலங்கள், தற்போது அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைக் கண்டு தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளனர். அதன்படி இயக்குனர் சமுத்திரக்கனி, அமீர், சேரன், நடிகர் போஸ் வெங்கட் மற்றும் டாக்டர் ஷர்மிளா உள்ளிட்ட பலர், விஜய்யின் தற்போதைய அரசியல் ஆளுமையைப் புகழ்ந்து வருகின்றனர். “வெற்றி பெற்றவர்களுக்கே உலகம் தலை வணங்கும்” என்பதற்கு ஏற்ப, இந்த ‘மாற்றம்’ தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
