ஜிம்பாப்வே–நமீபியா அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியில் கிரிக்கெட் ரசிகர்களை வியக்க வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. 7-வது விக்கெட்டுக்கான அதிகபட்ச கூட்டணி சாதனை ஒரே போட்டியில் இரண்டு முறை முறியடிக்கப்பட்டது. முதலில் ஜிம்பாப்வே வீரர்கள் ரியான் பர்ல் மற்றும் பிராட் எவன்ஸ் இணைந்து புதிய சாதனையை உருவாக்கினர்.

ஜிம்பாப்வே அணி ஒரு கட்டத்தில் 101 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது 7-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரியான் பர்ல்–பிராட் எவன்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடி, வெறும் 48 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் 2021-ல் ஆஸ்திரேலியாவின் டேனியல் சாம்ஸ்–மார்கஸ் ஸ்டோய்னிஸ் இணைந்து படைத்த 92 ரன்கள் சாதனையை அவர்கள் முறியடித்தனர்.

இதன் மூலம் ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. பின்னர் 196 ரன்கள் என்ற இலக்கை துரத்திய நமீபியாவும் ஒரு கட்டத்தில் சிக்கலில் இருந்த நிலையில், ஜேன் கிரீன் மற்றும் அலெக்சாண்டர் வோல்சென்க் 7-வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்து புதிய சாதனையை உருவாக்கினர். இதனால் அதே போட்டியில் சில மணி நேர இடைவெளியில் 7-வது விக்கெட் கூட்டணி சாதனை இரண்டாவது முறையாக உடைக்கப்பட்டது.

ஆனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் நமீபியாவால் வெற்றியை எட்ட முடியவில்லை. கடைசி ஓவரில் ஜிம்பாப்வேயின் பிராட் எவன்ஸ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்த, நமீபியா 190 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஜிம்பாப்வே 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒரே டி20 சர்வதேச போட்டியில் 7-வது விக்கெட் கூட்டணி சாதனை இருமுறை முறியடிக்கப்பட்டது இந்த ஆட்டத்தை கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவமானதாக மாற்றியுள்ளது.