தொழில்நுட்ப உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் செயற்கை நுண்ணறிவு (AI), அடுத்த 12 முதல் 18 மாதங்களில் வேலைவாய்ப்பு சந்தையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் AI பிரிவு தலைவர் முஸ்தபா சுலைமான் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவல்கள் சர்வதேச அளவில் பணியாற்றும் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு, கணினி முன்னால் அமர்ந்து பணிபுரியும் ‘ஒயிட் காலர் எனப்படும் உயர்மட்டப் பணியாளர்களுக்குத்தான் இதனால் அதிக பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக: சட்டத்துறை மற்றும் கணக்கியல் (Law & Accounting) சந்தைப்படுத்துதல் (Marketing) திட்ட மேலாண்மை (Project Management) உள்ளிட்டவைகள் அடங்கும்.

“அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் ஏஐ தொழில்நுட்பம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டும். மனிதர்கள் பல மணி நேரம் செலவிட்டுச் செய்யும் சிக்கலான வேலைகளை, ஏஐ கருவிகள் மிகத் துல்லியமாகவும், சில நிமிடங்களிலும் செய்து முடிக்கும்.

தினசரி அலுவலகப் பணிகளில் உள்ள பெரும்பான்மையான வேலைகளைத் தானியங்கி முறையில் ஏஐ மேற்கொள்ளப்போகிறது. இது சந்தையில் இதுவரை பார்த்திராத ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், ஏஐ-ன் இந்த அசுர வளர்ச்சி ஐடி ஊழியர்களுக்குத் தூக்கமில்லாத இரவுகளைக் கொடுத்துள்ளது. மனித சக்தியால் செய்யப்படும் வேலைகளை இயந்திரங்களே செய்து முடிக்கும் என்பதால், வேலைவாய்ப்புச் சந்தையில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்ப உலகம் இந்த மாற்றத்தை ‘டிஜிட்டல் புரட்சி’ எனக் கொண்டாடினாலும், நடுத்தர வர்க்கப் பணியாளர்களுக்கு இது ஒரு சவாலான காலமாகவே பார்க்கப்படுகிறது.