உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில், மூத்த வழக்கறிஞரும் முன்னாள் ஊராட்சித் தலைவருமான ராஜீவ் சிங் (எ) ரிண்டு சிங், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். சனிக்கிழமை அதிகாலை நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிர்சாபூர் மாவட்டத்தின் கத்ரா கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்பாவ் நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் சிங். மூத்த வழக்கறிஞரான இவர், இன்று காலை வழக்கம்போல நடைப்பயிற்சிக்காக வெளியே சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், ராஜீவ் சிங்கை வழிமறித்து நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தக் கொலையின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், ராஜீவ் சிங் நடந்து வருவதைக் கண்டதும், பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த நபர் கீழே இறங்கி அவரை நோக்கிச் சுடுகிறார். பின்னர் மீண்டும் பைக்கில் ஏறித் தப்பிக்க முயன்றபோது, நீண்ட நேரமாக பைக் ஸ்டார்ட் ஆகாமல் நின்றுள்ளது. இதைக் கண்ட அங்கிருந்த இரண்டு இளைஞர்கள் கொலையாளிகளைப் பிடிக்க முயன்றனர். ஆனால், துப்பாக்கியைக் காட்டி அவர்களை மிரட்டிய கொலையாளிகள், பின்னர் பைக்கை ஸ்டார்ட் செய்து தப்பிச் சென்றனர்.
मिर्जापुर में खौफनाक वारदात, वरिष्ठ अधिवक्ता के सीने पर कट्टा सटाकर मारी गोली, मौके पर मौत
पूरी खबर : https://t.co/z6s8NuAru7#UttarPradesh pic.twitter.com/GEkZpR91F0
— NDTV India (@ndtvindia) April 11, 2026
உயிரிழந்த ராஜீவ் சிங், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி ஏற்கனவே கத்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது தெரியவந்துள்ளது. அவர் மீது இதற்கு முன்னரே இரண்டு முறை கொலை முயற்சித் தாக்குதல்கள் நடந்துள்ளன. காவல்துறையினரின் அலட்சியத்தால் தற்போது அவரது உயிர் பறிபோயுள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ராஜீவ் சிங்கின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
