உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், உயிரிழந்த மகளின் உடலை அடக்கம் செய்யாமல் 4 மாதங்களாக வீட்டிற்குள்ளேயே வைத்து பூட்டிவிட்டு, தந்தை தலைமறைவான அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உதய்பான் பிஸ்வாஸ், கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மகள் பிரியங்காவுடன் (34) மீரட்டின் பேகம் பாக் பகுதியில் வசித்து வந்தார். கடந்த 4 மாதங்களாக இவர்களது வீடு பூட்டப்பட்டிருந்தது. தந்தை, மகள் இருவரும் எங்கு சென்றார்கள் என்று தெரியாமல் உறவினர்கள் தேடி வந்தனர். அவர்களது செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 10) உதய்பான் பிஸ்வாஸ் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடையில் இருப்பதை அவரது உறவினர் விஸ்வஜித் தற்செயலாகப் பார்த்தார். உடனடியாக மற்ற உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உறவினர்கள் அவரிடம் பிரியங்கா குறித்து விசாரித்தபோது, அவர் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தார்.
உறவினர்கள் துருவித் துருவி விசாரித்தபோது, உதய்பான் பிஸ்வாஸ் அதிர்ச்சிகரமான உண்மையைக் கூறினார். தனது மகள் 4 மாதங்களுக்கு முன்பே இறந்துவிட்டதாகவும், அவளது உடல் வீட்டிற்குள்ளேயே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது, படுக்கையறையில் பிரியங்காவின் உடல் எலும்புக்கூடாகவும், அழுகிய நிலையிலும் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீடு முழுவதும் குப்பைகள் நிறைந்திருந்தன. பிணத்தின் துர்நாற்றம் வெளியே தெரியாமல் இருக்க, உதய்பான் பிஸ்வாஸ் அதிகப்படியான வாசனை திரவியங்களை (Perfume) பயன்படுத்தியது தெரியவந்தது.
உறவினர்கள் அளித்த தகவலின்படி, பிரியங்காவிற்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்ததாகவும், அவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் மாந்தீரிகம் மற்றும் தந்திர முறைகள் மூலம் குணப்படுத்த தந்தை முயன்றதாகவும் கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் 2025-இல் மகள் உயிரிழந்த நிலையில், அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் சில நாட்கள் சடலத்துடன் வசித்த உதய்பான், பின்னர் வீட்டைப் பூட்டிவிட்டு ஹரித்வாருக்குச் சென்றுள்ளார்.
தற்போது காவல்துறையினர் உதய்பானைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியங்காவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மீரட் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
