நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நடிகர் விஜயின் இரண்டாவது மாநில மாநாடு குறித்து பேசினார். “விஜய் நடத்திய மாநில மாநாட்டில் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகள்தான் ஆட்சி செய்துவருகின்றன. அந்த வரிசையில் அடுத்த மாநாட்டில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி போன்றவர்களின் படங்களும் வைக்கப்படுமா?” என்ற கேள்வியையும் எழுப்பினார்.

மேலும், “விஜய்யின் பின்னால் திரளும் ரசிகர்கள் அவருக்கு நண்பர்கள் மற்றும் நண்பிகளாக இருக்கலாம். ஆனால் எனக்கு பின்னால் இருக்கின்றவர்கள் என் தம்பிகளும் தங்கைகளும். அவர்களுக்கும் உரிமையை பெற்றுத்தரவே நான் போராடுகிறேன். ஒரு அரசியல் நிலைப்பாட்டை உறுதியாக எடுத்து அதில் நிலைத்திருக்க வேண்டும். ‘மன்னர் ஆட்சி’ பற்றி பேசும் விஜய் முதலில் காங்கிரசை எதிர்த்து பேச வேண்டும். ஏனெனில் ‘ஒரே குடும்பத்தில் பிறந்ததால் பதவி’ என்பதையே அவர் குறை கூறுகிறார் என்றால், அதற்கான முதல் எடுத்துக்காட்டு காங்கிரச்தான்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்து தண்டனை பெற்றால் அவர்களின் பதவியை நீக்குவது தான் நியாயம் எனவும், அதன் வழியாகதான் அரசியலில் ஒழுங்கு வந்து சேரும் என்றும் கூறினார். “இது போன்ற பல முக்கியமான மாற்றங்கள், சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. அதற்காகவே நாம் போராடிக்கொண்டிருக்கிறோம்” என சீமான் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.