ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டுமா? அல்லது வெளியேற வேண்டுமா? என்ற ‘வாழ்வா-சாவா’ போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த அதிரடி ஆட்டத்தில், சஞ்சு சாம்சன் 97 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், இந்தியப் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இது டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா துரத்திய அதிகபட்ச இலக்காகும்.
196 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பயணித்த இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இந்திய அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய சஞ்சு சாம்சன், மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார்.
வெறும் 50 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை விளாசிய சாம்சன், 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் 19.2 ஓவர்களிலேயே 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்துச் சென்ற நாயகனாக உருவெடுத்துள்ள சஞ்சு சாம்சன், ஆட்டநாயகன் விருது வாங்கியவுடன் தனது மனைவி சாருலதாவுக்கு வீடியோ கால் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியுடன் விளையாடவுள்ளதால், அவர் தோனிக்குத்தான் கால் செய்திருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தனது சிறுவயதுத் தோழியான மனைவியுடன் அந்த வெற்றியைப் பகிர்ந்துகொண்டார்.
