ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறியிருந்தாலும், இந்திய அணியின் செயல்பாடுகளை அந்நாட்டு ரசிகர்களும் ஊடகங்களும் கூர்ந்து கவனித்து வருகின்றனர். குறிப்பாக, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் ஆட்டத்தை மாற்றியமைத்த விதம் குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் வியந்து பாராட்டியுள்ளன.

ஃபேஸ்புக்கில் கிரண் கான் என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் சஞ்சு சாம்சனின் ஆட்டத்தைப் புகழ்ந்துள்ளார். “சஞ்சுவின் ஆட்டத்தைப் பார்த்த பிறகு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் ஒரு சிறந்த வீரர், ஆனால் இந்திய அணியில் அவருக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “பவர் பிளேயிலேயே இந்தியா இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்தபோதும், சஞ்சு மிகவும் அமைதியாக விளையாடினார். இஷான் கிஷன், அபிஷேக் சர்மா போன்றோருக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்திய அணி, சஞ்சு சாம்சனைத் தொடக்கத்தில் கண்டுகொள்ளவில்லை. ஆனால், ஐபிஎல் கேப்டன்சி முதல் இன்றைய போட்டி வரை சஞ்சு சாம்சனின் ஆட்டம் அபாரமாக உள்ளது. அவர் எந்தவித அழுத்தமும் இன்றி விளையாடினார். எங்கள் அணி வெளியேறியிருந்தாலும், சஞ்சுவின் ஆட்டத்தைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது,” என்று அந்த செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மார்ச் 1-ஆம் தேதி நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வாழ்வா-சாவா போட்டியில், 196 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. பவர் பிளேயில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்தியா அழுத்தத்தில் இருந்தபோது, சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 97 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

இறுதியில் 19.2 ஓவர்களிலேயே 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. சஞ்சுவின் இந்த அதிரடி ஆட்டம் இந்திய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், பாகிஸ்தான் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. மேலும் ஒருபுறம் பாகிஸ்தான் மீடியாக்கள் இந்திய அணியின் வெற்றியை விமர்சிப்பது குறிப்பிடத்தக்கது.