ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் சூப்பர்-8 சுற்றின் இறுதி மற்றும் மிக முக்கியமான ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இந்தியாவின் அதிரடி ஆட்டம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, ரோஸ்டன் சேஸின் (40 ரன்கள்) பங்களிப்புடன் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரைப் பதிவு செய்தது.

196 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பயணித்த இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. பவர் பிளேயிலேயே அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் விக்கெட்டுகளை இந்தியா பறிகொடுத்தது. இக்கட்டான சூழலில் களமிறங்கிய சஞ்சு சாம்சன், மிகவும் சமநிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாட வேண்டிய தருணங்களில் பவுண்டரிகளை விளாசிய சாம்சன், விக்கெட்டுகள் விழுந்தபோது பார்ட்னர்ஷிப் அமைக்க நிதானமாக விளையாடினார்.

அவர் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து, 4 பந்துகள் மீதமிருக்க இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

டி20 உலகக்கோப்பையில் இருந்து பாகிஸ்தான் அணி ஏற்கனவே வெளியேறியுள்ள நிலையில், இந்திய அணியும் அரையிறுதிக்குத் தகுதி பெறக்கூடாது என்று அந்நாட்டு ரசிகர்களும் ஊடகங்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இந்திய அணியின் இந்தச் சிறப்பான செயல்பாட்டின் மூலம் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளதை பாகிஸ்தான் மீடியாக்கள் ‘X’தளத்தில் விமர்சித்து வருகின்றன.