டி20 உலகக்கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 196 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்தியா, டி20 உலகக்கோப்பை வரலாற்றில் தங்களின் மிகச்சிறந்த வெற்றியைப் பதிவு செய்தது.

முக்கியமான ஆட்டத்தில், பொறுப்புடன் விளையாடிய சஞ்சு சாம்சன் 97 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இப்போட்டியில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை அவர் விளாசினார்.

வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், சஞ்சு சாம்சனை வெகுவாகப் பாராட்டினார். “சஞ்சு சாம்சன் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். டி20 கிரிக்கெட்டில் ஏற்கனவே 3 சதங்களை அவர் விளாசியுள்ளார். அவரது திறமை எங்களுக்கு எப்போதும் தெரியும். நியூஸிலாந்துக்கு எதிரான கடினமான தொடருக்குப் பிறகு அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டாலும், உலகக்கோப்பை போன்ற முக்கியமான போட்டிகளில் அவர் சிறப்பாகச் செயல்படுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது” என்று கம்பீர் தெரிவித்தார்.

இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா ஆறாவது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.