சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வரும் ஒரு சிசிடிவி வீடியோ, பார்ப்பவர் நெஞ்சை பதற வைக்கிறது. சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு பைக் சவாரி, தவறான திசையில் (Wrong side) வந்த மற்றொரு பைக் காரருக்கு வழி விடுவதற்காகத் தனது வேகத்தைக் குறைத்துள்ளார். ஆனால், அந்த ஒரு நொடி மனிதாபிமானம் அவருக்கு எமனாக மாறியது. அவர் மெதுவாகச் சென்ற அந்த நேரத்தில், பின்னால் மின்னல் வேகத்தில் வந்த பேருந்து அவர் மீது ஏறி இறங்கியதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். சாலை விதிகளை மதிக்காமல் தவறான திசையில் வாகனம் ஓட்டுவது, நம் உயிரை மட்டுமல்ல, சாலையில் ஒழுங்காகச் செல்பவர்களின் உயிரையும் சேர்த்துப் பறிக்கும் என்பதற்கு இந்த விபத்து ஒரு கொடூரமான சாட்சியாக அமைந்திருக்கிறது.

​இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஆவேசத்தில் கருத்துக்களைக் கொட்டி வருகின்றனர். “இந்தியாவில் யாருக்குமே பொறுமை கிடையாது, எல்லோரும் அவசரத்தில்தான் பறக்கிறார்கள்” என ஒரு பயனர் வருத்தப்பட, “மணல் நிறைந்த சாலைகளும் வழுக்கும் தன்மையும் கூட இந்த விபத்துக்கு ஒரு காரணம்” எனச் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். எது எப்படியோ, விதியை மீறிய அந்த ஒரு நபரால், சட்டத்திற்கு உட்பட்டு நடந்த ஒரு அப்பாவியின் உயிர் இன்று பிரிந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் செல்லும்போது எப்போதுமே கவனமாக இருங்கள் மக்களே