மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் மருத்துவமனை உணவகத்தில் ஒன்றரை வயது குழந்தையை தாயிடம் இருந்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனை வளாகத்தில் பணியாற்றி வரும் குழந்தையின் தாய், அந்த இளைஞரை ஏற்கெனவே அறிந்திருந்ததாகவும், அவர் குழந்தையுடன் அடிக்கடி விளையாடி வந்ததால் அவர்மீது சந்தேகம் ஏற்படவில்லை என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனை உணவகத்தில் பணியில் இருந்த தாய், தனது வேலையில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் குழந்தையை சிறிது நேரம் கவனித்துக் கொள்ளுமாறு அந்த இளைஞரிடம் கேட்டுள்ளார். சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு அவர் திரும்பி வந்தபோது, குழந்தையையும் அந்த இளைஞரையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தாயும் உறவினர்களும் மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாகத் தேடத் தொடங்கினர். அப்போது அப்பகுதியில் இருந்த ஆடு மேய்ப்பவர் ஒருவர், குழந்தையை அழைத்துக்கொண்டு அந்த இளைஞர் மருத்துவமனைக்குப் பின்புறமுள்ள தனிமையான பழுதடைந்த கட்டடம் நோக்கிச் சென்றதைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார்.
அந்தத் தகவலின் அடிப்படையில் குழந்தையின் குடும்பத்தினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது குழந்தையுடன் சந்தேகத்துக்குரிய நிலையில் இருந்த இளைஞரைப் பார்த்ததாகவும், உடனடியாக குழந்தையை மீட்டு போலீஸாருக்கு தகவல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் அந்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சத்தர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்ததாகவும், அவருக்கு முன்பு குற்றப் பின்னணி எதுவும் இல்லை என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். தாயின் புகாரின் பேரில் குழந்தையை கடத்தல் மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்பான பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தின் முழு பின்னணி, குற்றத்தின் தன்மை உள்ளிட்டவை குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
