ஒடிசா பாலசோர் மாவட்டம் பாஹாநகா பகுதியை சேர்ந்த உள்ளூர் மக்கள் ரயில் விபத்தில் பலியானவர்களுக்காக 10-வது நாள் சடங்கை மேற்கொண்டு உள்ளனர். கடந்த ஜூன் 2-ம் தேதி நடந்த ரயில் விபத்தில் பலியான அனைவருக்காகவும், 10-வது நாள் சடங்காக கிராமத்தைச் சேர்ந்த 116 பேர் தங்களது தலையை மொட்டையடித்து குளத்தில் குளித்து இறுதிக் காரியத்தை செய்துள்ளனர்.

பஹாநகர் பகுதியை சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர்கள் இதுகுறித்து கூறியதாவது, ரயில் விபத்து நேர்ந்தபோது நூற்றுக்கணக்கானோரை நாங்கள் மீட்டோம். பெரும்பாலானோரின் உடல்களையும் மீட்டுக் கொடுத்தோம். அவர்கள் அனைவரையும் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களாக கருதுகிறோம். எங்களது குடும்பத்தில் யாரேனும் பலியானால் இச்சடங்கை செய்வது வழக்கம். அதுபோன்று எங்கள் ஊரில் பலியானவர்களையும் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நினைத்து இந்த 10-வது நாள் சடங்கை செய்திருக்கிறோம் என்று கூறினர்.