அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கருதி, ஐ.நா. பருவநிலை ஒப்பந்தம் உள்ளிட்ட 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா அதிரடியாக விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு இனி சேவை செய்யாத 35 ஐ.நா. அல்லாத குழுக்கள் மற்றும் 31 ஐ.நா. அமைப்புகளுக்கு நிதி வழங்குவதையும், அவற்றுடன் தொடர்பு கொள்வதையும் உடனடியாக நிறுத்த அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியாவும் பிரான்சும் இணைந்து முன்னெடுத்த சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு (ISA), இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு (IPCC) ஆகியவற்றிலிருந்தும் அமெரிக்கா வெளியேறியுள்ளது. அதிபரின் இந்த ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ கொள்கை அடிப்படையிலான முடிவு, உலகளாவிய பருவநிலை மாற்றத் தடுப்புப் பணிகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.