ரிலையன்ஸ் குழுமத்தின் வாரிசு ஆனந்த் அம்பானி, தனது ‘வந்தாரா’  விலங்குகள் காப்பக முயற்சியின் ஒரு பகுதியாக ‘வந்தாரா க்ரீமரி’ என்ற புதிய ஐஸ்கிரீம் பிராண்டை மும்பையில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

கிர் பசுக்களின் உயர்தர ஏ2 பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஐஸ்கிரீம்கள், ஃபில்டர் காபி, கேசர் பேடா, மலை குல்பி மற்றும் மிளகாய் தூள் தூவப்பட்ட கொய்யாப்பழம் உள்ளிட்ட 17 தனித்துவமான சுவைகளில் கிடைக்கின்றன.

மும்பை ஜியோ வேர்ல்ட் டிரைவ் பகுதியில் ஒரு சிறப்பு ஐஸ்கிரீம் டிரக் மூலம் இந்த பிராண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. மே 9 மற்றும் 10 தேதிகளில் இந்த டிரக் செயல்பட்ட நிலையில், மீண்டும் மே 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பொதுமக்களுக்காக வரவுள்ளது.

இந்த புதிய முயற்சி சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஒரு தரப்பினர் வெளிநாட்டு பிராண்டுகளுக்குப் போட்டியாக புதிய இந்திய நிறுவனம் களமிறங்குவதை வரவேற்றுள்ளனர்.

மற்றோரு தரப்பினர், ஏற்கனவே தொலைத்தொடர்பு மற்றும் எரிசக்தி துறையில் கோலோச்சும் ரிலையன்ஸ் குழுமம், உணவுத் துறையில் நுழைவதை விமர்சித்து வருகின்றனர்.

விலங்குகள் பாதுகாப்பு மையமான வந்தாரா, தற்போது வணிக ரீதியான நுகர்வோர் பிராண்டாக மாறியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனினும், உயர்தரப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஐஸ்கிரீம்கள் நகர்ப்புற மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.