கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பிரபல அசைவ உணவகம் “எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி”யில் தகராறு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் சத்தியநாராயணன் என்ற இளைஞர் ஆன்லைன் மூலம் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட போது, பிரியாணி இலையை பீடித்துண்டு என்று தவறாக நினைத்து உணவகத்திற்கு சென்று சண்டை போட்டுள்ளார்.

இந்த தகராறில் சத்தியநாராயணன், ஹோட்டல் ஊழியர்களை மட்டுமல்லாமல், விசாரிக்க வந்த காவலர்களையும் வசைபாடி, ரோட்டில் நடந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தின் பின்னர் “எஸ். எஸ். பிரியாணி” தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போதை தெளிந்த பிறகு, சத்தியநாராயணன் தனது தவறை உணர்ந்து, இனி இப்படி நடக்கமாட்டேன் என்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார். இருப்பினும், பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்டதற்காக போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

விசாரணையின் போது, சத்தியநாராயணன் மன அழுத்தம் காரணமாகவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் ஒரு சிறிய பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சமூக வலைதளங்களில் இதுகுறித்த வீடியோ வைரலாகி வருவதால், அது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.