மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மற்றும் குற்றப்பிரிவு போலீசார் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், மனித ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் மாபெரும் போலி பால் தயாரிப்பு மோசடி அம்பலமாகியுள்ளது.

மேலும் நிர்மல் டிடெர்ஜென்ட் பவுடர் துணி துவைக்கும் சோப்பு தூள், யூரியா, காஸ்டிக் சோடா, பாமாயில் மற்றும் சோயாபீன் எண்ணெய் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயனங்களை ஒன்றாகக் கலந்து, சுமார் 2.3 கோடி லிட்டர் அளவிலான செயற்கை பால் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டு சந்தையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் பிரபல நிறுவனங்களின் அசல் பால் பாக்கெட்டுகளைப் போன்றே போலியான பாக்கெட்டுகளில் அடைத்து இந்த இரசாயனக் கலவை விற்பனை செய்யப்பட்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து, இந்த மாபெரும் நெட்வொர்க்கின் முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர்.

அதோடு ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்திற்காக மக்கள் நம்பி வாங்கும் பாலில், கடந்த சில ஆண்டுகளாகவே இத்தகைய கொடூரமான கலப்படம் தடையின்றி அரங்கேறி வந்துள்ளது நுகர்வோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோதனையின் போது, நூற்றுக்கணக்கான லிட்டர் இரசாயன திரவங்கள், காலி பால் பாக்கெட்டுகள் மற்றும் போலி பால் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நச்சுப் பாலைத் தொடர்ந்து உட்கொள்வதால் பொதுமக்களுக்கு, குறிப்பாகக் குழந்தைகளுக்கு கடுமையான வயிற்று உபாதைகள், சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் உயிருக்கே ஆபத்தான பல்வேறு ஆரோக்கியப் பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாகப் பால் பண்ணைகள் மற்றும் விநியோகஸ்தர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மாநிலம் தழுவிய அளவில் தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.